இலங்கையில் பாடசாலைகளை மீளத்திறத்தல்
இலங்கைப் பிள்ளைகள், கடந்த 2020 மார்ச் தொடக்கம் (ஏறத்தாழ இரண்டரை வருடங்கள்) இடையிடையே பாடசாலையிலிருந்து அப்பாற்பட்டிருந்தனர். பிரதானமாக கோளமய பெருங் கொள்ளை நோயும், அண்மைக்காலமாக நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியும் இந்த நிலைக்குக் காரணமாயின. தரமான கற்கைக்கால இழப்பு காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பினால் மில்லியன் கணக்கான மாணவர்கள் மிகக் கஷ்டமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாடசாலைகளைத் திறப்பதற்கான ஒழுங்குகளை கல்வி அமைச்சு அவ்வப்போது மேற்கொண்டதாயினும் கல்விச் செயன்முறையைத் தொடங்குவது கடினமாக அமைந்தமைக்கும் பல காரணங்கள் ஏதுவாகின. அவ்வாறான இடையிட்ட பாடசாலை வருகை மூலம் பிள்ளைகள், கற்றல் இடைவெளிகளைக் குறைத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவது கடினமானது. பாடசாலைகள் மூடிவைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட கற்கைக் கால இழப்பைத் தெளிவாகக் கணித்தறிய முடியுமாயினும், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பைக் கணித்தறிவது இலகுவான ஒரு காரியமல்ல. அதற்கான காரணங்கள் பலவாகும்.
அவ்வாறான ஒரு காரணம், கல்வி அமைச்சு, தேசியக் கல்வி நிறுவகம், மாகாணக்கல்வி அமைச்சுக்கள் ஆகியவற்றின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு தலையீட்டு முயற்சிகள் ஆகும். குருகுலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சனல் NIE, e-தக்சலாவ, வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் வேலைத்திட்டங்கள் போன்றவை அவ்வாறான சில முயற்சிகளாகும். எனினும், இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் விளைவுகள் இன்னமும் தெளிவாக அளந்தறியப்படவில்லை. அதேவேளை இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் எல்லா மாணவர்களையும் சீராகச் சென்றடையவில்லை என்பதும் உண்மையாகும். தொடர்புறுதல், பரப்பல் வியாபகம், மாணவர்களால் சாதனங்களைப் பெற முடியாமை போன்றவை அதற்கான சில காரணங்களாகும். நாட்டின் கல்வி முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த எல்லாத் தலையீட்டு முயற்சிகளையும் பாராட்டும் அதேவேளை, 25-07-2022 இல் பாடசாலைகளைத் திறப்பதுடன் கூடவே, சமாந்தரமாக நாடளாவிய ரீதியில் கற்றல் மீட்பு வேலைத் திட்டமொன்றினை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
COVID-19 பெருந்தொற்றின் பின்னர் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள கோளமய வழிகாட்டல்களையும் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமைகளையும் கவனத்திற் கொண்டு, இலங்கையில் பாடசாலைகளைத் திறக்கும் திட்டத்தின்போது பின்வரும் முக்கிய விடயங்களைக் கவனத்திற் கொள்வது பொருத்தமானதாகும்.
-
எல்லாப் பிள்ளைகளையும் பாடசாலைக்கு மீளத் தருவித்தல்.
-
தமது தற்போதைய தரங்களில் கல்வியைத் தொடங்குவதற்காக மாணவர் ஆயத்த நிலையை இனங்காணல்.
-
பெரிதும் பாதிப்புக்கு உள்ளான குழுக்களை இனங்காணலும் அவர்களுக்கு மேலதிக உதவி வழங்குதலும்.
-
பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்துக்காகச் சமுதாயத்தின் ஆதரவைப் பெறுதல்.
-
மீட்டெடுக்கும் வரையில் பிரதானமாக பாடசாலைகளை மீளத் திறக்கும் வேலைத் திட்டத்துக்காக குறித்துரைக்கப்பட்ட அத்தியாவசிய உள்ளடக்கத்தின் (தேர்ச்சிகளும் கற்றற்பேறுகளும்) மீது கவனஞ் செலுத்துதல்.
-
மீட்டெடுக்கும் வரையில், யதார்த்த பூர்வமான, கற்போன் நேயமான உள்ளடக்கத்துக்கேயுரிய கணிப்பீட்டு முறைமையொன்றினை நடைமுறைப்படுத்தல்.
பாடசாலைகளைத் மீளத் திறத்தலுக்கான ஓர் உடனடி நடவடிக்கையாக, தேசிய கல்வி நிறுவகமும் (NIE) கல்வி அமைச்சும் (MOE) மாகாணக் கல்வித் திணைக்களங்களும் கூட்டாக, தரம் 1-11 வரையிலான தரங்களுக்காக அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கமொன்றினை (ELC) விருத்தி செய்துள்ளது. அடுத்த தரத்தை வெற்றிகரமாகச் சென்றடைவதற்கு மாணவர் ஒவ்வொருவருக்கும் இந்த அத்தியாவசியக் கற்றல் உள்ளடக்கத்தில் பாண்டித்தியம் பெறுவது கட்டாயமானது எனக் கருதப்படுகிறது. பொதுவான கலைத்திட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள மீதமான உள்ளடக்கம் அந்தந்த தரத்துக்கான விருப்புக்குரிய கற்றல் உள்ளடக்கமாகக் கருதப்படுகின்றது.
-
மாணவர்கள் மீட்பு நிகழ்ச்சித் திட்டத்தில் தரப்பட்டுள்ள அத்தியாவசிய கற்றல் மட்டங்களில் பாண்டித்தியம் பெறல்.
-
மாணவர்கள் அந்தந்த தரத்தில் பாண்டித்தியம் பெறவேண்டிய உத்தேச கலைத்திட்ட உள்ளடக்கத்தை அடையக் கூடியவாறாக எழுத்தறிவுத் திறன்கள் மீதும் எண்ணறிவுத் திறன்கள் மீதும் விசேட கவனஞ் செலுத்தி இரண்டரை வருடங்களாக ஒன்று திரண்ட கற்றல் இழப்பை மீட்டெடுத்தல்.
இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு பின்வருவோருடன் தொடர்பு கொள்ளலாம்.
திரு. எச். யு. பிரேமதிலக்க,
மேலதிக செயலாளர்,
கல்வித் தர விருத்திப் பிரிவு,
கல்வி அமைச்சு.
தொடர்பு இல: 0718076888
கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன,
பணிப்பாளர் நாயகம்,
தேசிய கல்வி நிறுவகம்.
தொடர்பு இல: 0773823261
திரு. ரஞ்சித் பத்தமசிறி,
பிரதிப் பணிப்பாளர் நாயகம்,
விஞ்ஞானமும் தொழினுட்பமும் பீடம்
தேசிய கல்வி நிறுவகம்.
தொடர்பு இல: 0714497131
கலாநிதி தர்சன சமரவீர
பிரதிப் பணிப்பாளர் நாயகம்
மானிடவியல், மொழிகள், சமூக விஞ்ஞானங்கள் பீடம்
தேசிய கல்வி நிறுவகம்
தொடர்பு இல: 0773131987
|